ஆன்லைன் சூதாட்டம்..! மீண்டும் ஒரு தற்கொலை!!

 
சல்மான்

ஆன்லைன் சூதாட்டம் என்னும் போதையில் மூழ்கிய பலர் பணத்தை இழந்து மன உளைச்சலால் கடைசியில் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ளது.  ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நாளுக்கு நாள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.  இதனை கருத்தில் கொண்டு   தமிழக சட்ட மன்றத்தில் ஆன்லை சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனிடையே  இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு - மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் வயது 22. இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். சூதாட்டம் விளையாட நண்பர்களிடம் கடனாக பணம்பெற்று விளையாடியதாக கூறப்படுகிறது.   இந்த சூதாட்டத்தால் அதிகளவில் பணத்தை இழந்த சல்மான் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

ஒருவர் பலி

இந்நிலையில் சல்மான் வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு போலீசார் சல்மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

From around the web