சோகம்!! ரயில் ஏறியதால் கால்களை இழந்த சிறுவன்!!

தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்..
 
 கான்பூர்

கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றம் . தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார்.

 உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர். இந்த வேளையில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை போலீசார் தண்டவாளத்தில் அள்ளிவீசி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்த காய்கறிகளை கண்ணீரோடு சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்யான்பூர் எனும் பகுதி உள்ளது. இங்கு ரயில் நிலையம் உள்ளதால் மக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள்.

இதனால் ஏராளமானவர்கள் ரயில் நிலையத்தையொட்டி பகுதிகளில் சாலையோரம் கடைகள் அமைத்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.


இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதாக புகார்கள் எழுந்தன. மேலும் இந்த வியாபாரிகளால் போக்குவரத்து இயங்கவும், பயணிகள் சென்று வரவும் இடையூறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில் தான் கல்யாண்பூரில் ரயில் நிலையம் அருகே ஜிடி ரோடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி துவங்கியது.

கான்பூர்


இந்த பகுதியில் நேற்று இந்திரா நகர் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் போலீசார், சாலையோர வியாபாரிகளின் பொருட்களை தூக்கி வீசி கடைகளை காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் இர்பான் என்ற வியாபாரி ரயில் தண்டவாளம் அருகே உள்ள சாலையில் காய்கறிகள் வியாபாரம் செய்தார். இர்பானின் கடையையும் போலீசார் அகற்றினர்.


இந்த வேளையில் போலீசார் காய்கறிகள், தராசு, படிக்கற்களை தூக்கி அருகே உள்ள தண்டவாளத்தில் வீசினர். மேலும் அவரது கடையை காலி செய்தனர். இந்த வேளையில் தண்டவாளத்தில் வீசப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை எடுக்க இர்பான் தண்டவாளத்துக்கு சென்றார்.

கான்பூர்
இந்த வேளையில் தண்டவாளத்தில் வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இர்பானின் 2 கால்களிலும் ரயில் ஏறி இறங்கியது. இதனால் அவரது கால்கள் துண்டானது. இதனால் வலி தாங்க முடியாமல் இர்பான் அலறி துடித்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கான்பூர்

இதுபற்றி இர்பானின் தந்தை சலீம் அகமது கூறுகையில், ‛‛எனது மகனுக்கு 20 வயது தான் ஆகிறது. இப்போது 2 கால்களையும் இழந்து துடிக்கிறான்'' எனக்கூறி கதறி அழுதார். மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டினார்கள் இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறியதாவது ஜிடி சாலையில் வியாபாரிகளை இந்திரா நகர் காவல் நிலைய பொறுப்பாளர் சதாப் கான் மற்றும் தலைமை காவலரான ராகேஷ் ஆகியோர் விரட்டியடித்தனர். மேலும் பொருட்களை தூக்கி வீசினர். இதை எடுத்தபோது இர்பான் ரயில் மோதி கால்களை இழந்தார். இருப்பினும் அதனை கண்டுக்கொள்ளாமல் சதாப் கான், ராகேஷ் ஆகியோர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த போலீசார் இர்பானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையோர வியாபாரிகளிடம் இருந்து போலீசார் ரூ.50யை தினமும் வசூலித்தாலும் இதுபோன்று அவர்களின் கடைகளை காலியும் செய்கின்றனர்'' என கூறினர்.

கான்பூர்

இதுபற்றி கான்பூர் மேற்கு கூடுதல் டிசிபி லக்கன் யாதவ் கூறுகையில், ‛‛இர்பான் ரயில் தண்டவாளம் அருகே காய்கறி விற்பனை செய்தார். போலீசார் வந்ததும் காலி செய்யப்பட்டது. இந்த வேளையில் பொருட்கள் தண்டவாளத்தில் விழுந்தது. இதை எடுக்க சென்றபோது ரயில் மோதி விபத்து நடந்தது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கால்களை இழந்து தண்டவாளத்தில் கிடக்கும் இர்பான் கதறி அழும் சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் சம்பவம் தொடர்பாக நடந்தது என்ன? என்பது பற்றிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

From around the web