நெகிழ்ச்சி!! குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க போராடும் வனத்துறையினர்!!

மசினகுடி  அருகே  ஆற்றில்  அடித்து  வரப்பட்ட  குட்டி  யானையை  மூன்றாவது  நாளாக தாய்  யானையுடன்  சேர்க்கும்  முயற்சியில்  வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 
குட்டி யானை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் மசினகுடி, சிங்காரா, வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதை தவிற்க வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் யானை கூட்டம் தனது குட்டியுடன் ஆற்றைக் கடந்த சென்று பொது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குட்டி யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனை கண்ட  அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உதவியுடன் மழை வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் சீகூர் ஆற்றை ஒட்டி மறுகரையில் பெண் யானை இருப்பதை அறிந்த வனத்துறையினர் அதன் அருகில் குட்டி யானையை விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறுநாள் காலை நேற்று மீண்டும் அப்பகுதிக்கு சென்று பார்த்த வனத்துறையினர் குட்டி யானை அங்கு தனியாக இருப்பதை அறிந்தும், அங்கு வேறு ஏதும் பெண் யானை வராததால் வனப்பகுதியில் தாய் இன்றி தவித்துக் கொண்டிருந்த குட்டி யானையை மீட்டு இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் இரவு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வாழைத்தோட்டம் பகுதிக்கு பத்திரமாக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி குட்டி யானைக்கு குளுக்கோஸ், இளநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் வனத்துறையினர் குட்டி யானையை தீவிர கண்காணிப்பு பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து தாயை பிரிந்துள்ள குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் இன்று மூன்றாவது நாளாக மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சியானது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web