சினிமா தயாரிப்பாளர்களின் வருமான வரித்துறை சோதனையில் ரூ.200 கோடி சிக்கியது!!

 
வருமானவரித்துறை

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.மேலும், சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

வருமான வரி சோதனை

இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் , டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

From around the web