அதிர்ச்சி!! யானை தாக்கி விவசாயி பலி: கிராம மக்கள் சாலை மறியல்!

தேன்கனிக்கோட்டை  அருகே  காட்டுயானை  தாக்கி  விவசாயி  பலி :  நடுரோட்டில்  உடலை  வைத்து  உறவினர்கள்,  கிராம  மக்கள்  சாலை  மறியல்  போராட்டம்.

 
விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (65) இவரது மனைவி திம்மக்கா, இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசப்பா விவசாய தொழில் செய்து வந்தார். தனது வீட்டில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் மாலை வெங்கடேசப்பா தனக்கு சொந்தமான ஆடுகளை மரக்கட்டா கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது அப்பகுதியிலிருந்து வந்த காட்டுயானை ஒன்று விவசாயி வெங்கடேசப்பாவை துரத்தி சென்று கால்களால் மிதித்து தாக்கியுள்ளதுஇதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரது உடலை எடுத்து வந்து மரக்கட்டா கிராமத்தில் நடுரோட்டில் வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை சரக டிஎஸ்பி முரளி, தேன்கனிக்கோட்டை வனச்சரக அதிகாரி முருகேசன் மற்றும் காவல்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கிராமத்திற்குள் காட்டுயானைகள் நுழையாதவாறு மின்வேலிகளை அமைக்க வேண்டும், உயிரிழந்த வெங்கடேசப்பா குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க டார்ச் லைட் மற்றும் பட்டாசுகள் கிராமமக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

From around the web