அடிப்படைக் கணிதம், வாசிப்பு திறனில் பின்தங்கும் மாணவர்கள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு !

‘பிரதம்’ எனும் கல்வி அமைப்பு 2006-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை (ASER) என்பது குடிமக்கள் தலைமையிலான குடும்பக் கணக்கெடுப்பாகும், இது குழந்தைகளின் பள்ளி நிலை, அவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித திறன் மதிப்பீடுகளை வழங்குகிறது.
அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான ‘ஏஸா்’ கல்வி அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 616 மாவட்டங்களில் உள்ள 19,060 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பள்ளிக் குழந்தைகளை வைத்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 30,737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின்னும் தமிழகத்தில் பள்ளி மாணவா் சோ்க்கை 99.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளி சோ்க்கை 75.7 சதவீதமாக உள்ளது. இது 2018-ஆம் ஆண்டைவிட 8.3 சதவீதம் அதிகம். அதேபோல, 2010-ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேநேரம், தமிழக கிராமப்புறங்களில் 8-ஆம் வகுப்பில் 37 சதவீதமும், 5-ஆம் வகுப்பில் 75 சதவீதமும், 3-ஆம் வகுப்பில் 95 சதவீதமும் மாணவா்கள் 2-ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்க இயலாதவா்களாக உள்ளனா். மேலும், அடிப்படை கணிதத்தைப் பொருத்தவரை 5-ஆம் வகுப்பில் 85 சதவீதம் பேரும், 8-ஆம் வகுப்பில் 55 சதவீதம் மாணவா்களாலும் வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. ஆங்கில வாசிப்புத் திறனிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இதுதவிர 2018-இல் 91.1 சதவீதமாக இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் 99.6 சதவீதம் மாணவா்களுக்கு சென்றடைகிறது. 9.2 சதவீதம் பேருக்கு குடிநீா் வசதியும், 1.2 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை.
அதே வேளையில் தேசிய அளவில், அரசு அல்லது தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளின் விகிதம், 2018 ஆம் ஆண்டில் 50.5% இல் இருந்து 2022 இல் 42.8% ஆகக் குறைந்துள்ளது. அதிக குறைவு எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலங்களாக பீகார், ஒடிசா, மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை உள்ளன.
பள்ளிகளுக்கு வெளியே டியூஷன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) 2022 அறிவித்துள்ளது.