திருப்பூரில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!!

 
விபத்துக்குள்ளான கார்

காங்கயம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த   பள்ளக்காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் . வயது 35. இவருக்கு, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.   இவர் காங்கயம் பேருந்து நிலையம் அருகே, பழையகோட்டை சாலையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

விபத்து

இந்த நிலையில் விசுவநாதன் தனது மாமியார் மணி, மணியின் மருமகன் ரமணன், ரமணனின் மனைவி  உமாவதி  ஆகியோருடன் சென்னிமலை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர்.  காரை விசுவநாதன் ஒட்டிச் சென்றுள்ளார். கார் காலை 6 மணியளவில் காங்கயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை அருகே பாரவலசு  பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது,   சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.  இதில், விசுவநாதன் மற்றும் மணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணன் உயிரிழந்தார்.

பலி

இதையடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்  இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தப்பியோடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

From around the web