மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்ற முதல்வர்… குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கி ஆறுதல்…

 
முதல்வர் முதல்வர்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று   அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். சென்னை, வியாசா்பாடியை சேர்ந்தவர் பிரியா. வயது 17. சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மாணவி பிரியா கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர். இதனிடையே காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக     பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு, வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிரியா

ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரித்ததால், மாணவி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவி பிரியாவில் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டது. எனினும், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பிரியா

இதனிடையே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம்  பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தவறான சிகிச்சையே என்று கூறப்பட்டது. மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.   இதேபோல் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அரசு வேலைக்கான பணி ஆணை, நிவாரணத் தொகை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்.