விதிகளை மீறிய பெண் ஐ.பி.எஸ்… ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்..!

 
விதிகளை மீறிய பெண் ஐ.பி.எஸ்

தமிழக காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி.,க்களாக பணிபுரியும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு வழங்கும் கார்களுக்கு, நீல நிற பதிவு எண் பலகையில், வெள்ளை நிறத்தில் மூன்று 'ஸ்டார்'கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனிடையே ஐ.பி.எஸ் அதிகாரியின் கார் ஒன்று, இம்மாதம் 13ம் தேதி இரவு, 8:30 மணியளவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே   போக்குவரத்து விதிகளை மீறி, ஒரு வழி பாதையில் சென்றது.

விதிகளை மீறிய பெண் ஐ.பி.எஸ்

எதிர் திசையில் சென்றதால், விபத்து ஏற்படுமோ என, வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மூன்று ஸ்டாருடன் சென்ற போலீஸ் காரை   அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர், , மொபைல் போனில் படம் பிடித்து, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானதையடுத்து போக்குவரத்து விதிமீறல் குறித்து, சென்னை போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, விதி மீறி சென்றது ரயில்வே கூடுதல் டி.ஜி.பி., வனிதாவுக்கு அரசு வழங்கிய கார் என்பது   தெரிய வந்தது. சம்பவம் நடந்தபோது, காரில் கூடுதல் டி.ஜி.பி., இல்லை என, கூறப்படுகிறது.

விதிகளை மீறிய பெண் ஐ.பி.எஸ்

கூடுதல் டி.ஜி.பி வனிதாவிடம் ஓட்டுனராக பணிபுரியும் ஆயுதப்படை போலீஸ்காரர், எரிபொருள் நிரப்ப, ஒரு வழிப் பாதையில் எதிர் திசையில் சென்றுள்ளார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட, பெண் கூடுதல் டி.ஜி.பி.,யின் வாகனத்திற்கு, திருவான்மியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குமரன், 500 ரூபாய் அபராத தொகை விதித்து, ரசீது வழங்கி உள்ளார். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அபராத தொகை ரசீதை, சென்னை போலீசார், சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் போக்குவரத்து விதியை மீறி ஒரு வழி பாதையில் சென்றதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web