சோகம்!! பள்ளியின் கட்டுமான பணியில் மண்சரிவில் சிக்கி 2 கூலித்தொழிலாளர்கள் பலி!!

 
மண்சரிவு

நீலகிரி அருகே மண்சரிவில் சிக்கி கூலித்தொழிலாளர்கள் இருவர்   உயிரிழந்த சம்பவம்   பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரை பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியின்  கட்டுமான  பணி நடைபெற்று  வருகிறது. இந்த பணியில்  உதகையை  சேர்ந்த  சுமார்  ஐந்து கூலி தொழிலாளிகளும், சேலம் மற்றும் வேலூர் பகுதியை சேர்ந்த 4 தொழிலாளிகளும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் இன்று  அவர்கள் 4 பேரும் பள்ளத்தில் இறங்கி தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது  எதிர்பாராதவிதமாக திடீரென்று  15 அடி உயரத்திலிருந்து மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.  இதில்   சேலத்தை சேர்ந்த சேட் மற்றும் வேலு என்ற இருவர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர்.   இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக     தொழிலாளிகள்   இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் பல மணி நேரம் போராடி அவர்களை   சடலமாக மீட்டனர்.  பின்னர் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக  உதகை  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார். இது தொடர்பாக உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மண்சரிவில் கூலித்தொழிலாளர்கள் இருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.