நீலகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு..!!

பந்தலூர்  அருகே  உள்ள  பிதர்காடு பகுதியில்  உள்ள  தனியார்  தேயிலை  தோட்டத்தில்,  நள்ளிரவு  புகுந்த  ஒற்றை  காட்டு  யானை  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள  சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 
யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அமைந்துள்ள பிதர்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளதால் இந்த வனப்பகுதியில் யானைகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள், மற்றும் குடியிருப்புகளின் அருகே உணவு தேடி வருவது வழக்கம். இந்நிலையில் பந்தலூர் அருகே உள்ள பிதர்காடு பகுதியில்  நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை தனியார் தொழிலை தோட்டத்திற்குள் உலா வந்துள்ளது.

அப்போது தோட்டத்தில் இருந்த உயரமான பாக்கு மரத்தை உடைத்து சாப்பிட முயன்ற போது எதிர்பாரா விதமாக பாக்கு மரம் உடைந்து உயர் மின்சாரம் கம்பி மீது சாய்ந்து விழுந்தது. அப்போது பாக்கு மரத்தை யானை இழுத்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.  இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானை உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் மற்றும் நோய்களால் அதிகமான காட்டு யானைகள் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றது. எனவே காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை இது போன்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளிலிருந்து காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web