மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்.. அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு வாங்கியது அதானி குழுமம் !!

 
wpl

ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் அணிகளுக்கான டி20 போட்டித் தொடரை இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. விறுவிறுப்பான போட்டிகள், அனல் பறக்கும் ஆட்டம், பிபியை எகிறச் செய்யும் கடைசி ஓவர்கள் என ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்டுதோறும் இந்த தொடர் திருவிழாவைப் போல் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது.

wpl

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மகளிர் ஐபிஎல் போட்டிக்கு டபிள்யூ.பி.எல்.(WPL Womens Premier League) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விட தற்போது டபிள்யூ.பி.எல். அணிகளுக்கு அதிக தொகை கிடைத்துள்ளது. ஏலத்தின் மூலம் ரூ. 4669.99 கோடி கிடைத்திருக்கிறது. டபிள்யூ பிஎல் அணிகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தொடர் மூலமாக மகளிர் கிரிக்கெட்டுக்கான புரட்சி பிறந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் அந்த அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் மூடிய டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல். பெண்கள் அணிக்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கின. இதில் 17 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து இருந்தன. இதில் 7 ஐ.பி.எல். அணி நிர்வாகங்களும் அடங்கும்.

wpl

ஏலம் நிறைவடைந்த நிலையில், அதிகபட்சமாக அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் தங்கள் வசப்படுத்தியது. மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதேபோல் பெங்களூரு அணியை (ரூ.901 கோடி) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும், டெல்லி அணியை (ரூ.810 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் வாங்கின.

லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் நிறுவனம் தங்கள் வசமாக்கியது. 5 அணிகள் மொத்தம் ரூ,4,669.99 கோடிக்கு விற்பனை ஆனது. இது இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்ததை (ரூ.4 ஆயிரம் கோடி) விட அதிக தொகையாகும். விரைவில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளது. இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடிக்கு வியாகாம் 18 நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளது.


 

From around the web