10 மடங்கு உயர்வு.. ரூ.500க்கு விற்பனையான ஒரு கட்டு வாழையிலை ரூ.5,500-க்கு விற்பனை!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலைகளின் விலை திடீரென 10 மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகத் தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மார்க்கெட்டிற்கு வரும் வாழை இலைகளின் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. தொடர் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷங்கள் காரணமாக வாழை இலைகளுக்கான தேவைகள் சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ளன.

கடந்த மாதம் வரை ஒரு கட்டு வாழை இலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 மடங்கு உயர்ந்து ரூ.5,500-க்கு ஏலம் போயுள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு வாழை இலை ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத விலை உயர்வால் உணவக உரிமையாளர்களும், முகூர்த்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
