பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு - விதிகளை உருவாக்க 13 பேர் கொண்ட குழு அமைப்பு!
தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விதிகளை வகுக்க 13 பெண்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் முறையான கொள்கை வகுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்க 13 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
புதிய விதிகள் மற்றும் இது தொடர்பான விரிவான கொள்கையை உருவாக்கும் பொருட்டு இந்தக் குழுவிற்குக் கூடுதலாக மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
