ஒடிசாவில் பரபரப்பு - கிராமத்துக்குள் புகுந்த 15 அடி நீள ராட்சத முதலை மீட்பு!

 
முதலை

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த 15 அடி நீள ராட்சத முதலை ஒன்றை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வெற்றிகரமாகப் பிடித்துப் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பக்ககஹான் கிராமத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் திடீரென ராட்சத முதலை ஒன்று நுழைந்துள்ளது. அங்குள்ள கால்நடைத் தொழுவத்திற்குள் முதலை புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் துணிச்சலுடன் திரண்டு அதனை விரட்ட முயன்றபோது, அந்த முதலை அருகிலுள்ள குளத்திற்குள் சென்று பதுங்கிக்கொண்டது.

முதலை

இது குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, கிராம மக்களின் உதவியுடன் குளத்தை வளைத்தனர். குளம் முழுவதும் வலைவீசித் தேடிய அவர்கள், சுமார் 15 அடி நீளமுள்ள அந்த ராட்சத முதலையைப் பத்திரமாகப் பிடித்தனர்.

பிடிபட்ட முதலையின் வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, கிராம மக்கள் பலரின் உதவியுடன் தூக்கிச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. பின்னர், அந்த முதலை அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற பிதர்கனிகா தேசிய பூங்கா பகுதிக் கால்வாயில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை பிடிபட்டதை அடுத்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.