15 வருட காத்திருப்பு... சென்னையில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோவுடன் இணைப்பு - மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்!
சென்னையில் இயங்கி வரும் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோவுடன் இணைக்கத் தமிழ்நாடு அரசால் முதன்முதலாகக் கடந்த 2011-ஆம் ஆண்டில் முன்மொழிவு அனுப்பப்பட்டது. தற்போது 15 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, இந்த இணைப்புக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம் MRTS-ன் சொத்துக்கள், ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் முழுமையாகக் கைமாறுகின்றன. மெட்ரோ ரயில் கட்டமைப்புக்கு ஏதுவாக பறக்கும் ரயில் சேவையில் பல்வேறு அதிநவீன மாற்றங்களைச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. MRTS தண்டவாளங்களுக்கு ஏற்ப சிறப்புச் சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள், நகரும் மின்படிக்கட்டுகள் அமைத்தல் மற்றும் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில் நிலைய வளாகங்களை வணிக வளாகங்களாகப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, வரும் 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் MRTS வழித்தடம் முழுவதும் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு நிகராக உயர்த்தப்பட்டு இயக்கப்படும்.
