இன்ஸ்டாகிராமில் பழகி 16 வயது மாணவி கடத்தல்... விருதுநகரில் இளைஞர் கைது!
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (22) என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துவந்த அச்சிறுமி திடீரென மாயமானதால், பதறிய தாய் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இன்ஸ்டாகிராம் வழியே பழகிய கருப்பசாமி ஆசை வார்த்தைகள் கூறி அச்சிறுமியை விருதுநகருக்குக் கடத்திச் சென்றது வெளிச்சத்திற்கு வந்தது. விருதுநகருக்குச் சென்ற காவல்துறையினர் வாலிபருடன் இருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியைக் கைது செய்தனர். பின்னர் அவர் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
