தாலி கட்டும் நேரத்தில் 19 வயது மணப்பெண் செய்த பகீர் காரியம்.. பெற்றோர்கள், உறவினர்கள் கதறியும் நின்றுப்போன திருமணம்!

 
ஆடிப்பெருக்கு தாலி  மாற்றும்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில், தன்னை கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறி மணப்பெண்ணே காவல்துறைக்குத் தகவல் அளித்துத் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கும் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். முன்தினம் இரவு தடபுலாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று அதிகாலையில் முகூர்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.

கல்யாணம்

அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தட்டி எழுப்பிய பெற்றோர், திருமணத்திற்குத் தயாராகுமாறு கூறியுள்ளனர். ஆனால், தனக்குத் தாலி கட்டிக் கொள்ள விருப்பமில்லை என்றும், மேக்கப் போட மாட்டேன் என்றும் மணப்பெண் திடீரென அடம் பிடித்துப் பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்தார். பெற்றோர், உறவினர்களின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அந்தப் பெண், காலை 5.30 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்குத் தொடர்பு கொண்டு, தன்னைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்க முயல்வதாகப் புகாரளித்தார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீஞ்சூர் மற்றும் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார், மணப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால், திருமண மண்டபத்தை விட்டுப் பெற்றோர் சென்று விட்டனர். இதையடுத்து, தனியாக இருந்த அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு, பொன்னேரி அடுத்த அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

திருமணம்

திடீரெனத் திருமணம் நின்றதால், வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதுடன், மண்டபத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களும் உடனடியாக அகற்றப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார், ஏதேனும் காதல் விவகாரத்தில் திருமணத்திற்கு மறுப்பா அல்லது மாப்பிள்ளைப் பிடிக்கவில்லையா? படிப்பதற்காக மறுப்பா? வேறு என்ன உண்மையான காரணம் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.