14 மணி நேரம் லிப்டுக்குள் சிக்கித் தவித்த 19 வயது மாணவி - பல்கலைக்கழகத்தில் மின்தடையால் அதிர்ச்சி!

 
லிப்ட்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, 19 வயது மாணவி ஒருவர் சுமார் 14 மணி நேரம் லிப்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விடிய விடிய போலீசார் மற்றும் பெற்றோர்கள் வளாகம் முழுவதும் தேடியும் லிப்டுக்குள் மாணவி சிக்கியிருப்பது தெரியாமல் போன நிலையில், மறுநாள் காலை மின்சாரம் வந்த பிறகே அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

புனே லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வகோலியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பயின்று வருகிறார். சம்பவத்தன்று மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவி தனியாக லிப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால், கட்டிடத்தின் 5-வது மற்றும் 6-வது தளங்களுக்கு இடையே லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டது.

லிப்ட் நின்றதால் அதிர்ச்சியடைந்த மாணவி, கதவைத் தட்டியும் சத்தம் போட்டும் உதவிக்கு அழைத்துப் பார்த்துள்ளார். இதனிடையே, தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் 'ஹலோ' என்று சொன்ன அடுத்த நொடியே சிக்னல் இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதால் வெளியுலகத்துடனான கடைசித் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மகளைத் தொடர்பு கொள்ள முடியாமல் பதறிப்போன பெற்றோர், உடனடியாகப் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், இது குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், பல்கலைக்கழக ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து விடிய விடிய பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். ஆனால், மின்தடை காரணமாக நடுவழியில் நின்றிருந்த லிப்டுக்குள் மாணவி சிக்கியிருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

மறுநாள் காலை 6 மணியளவில் மின்சார சேவை சீரானதைத் தொடர்ந்து லிப்ட் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அப்போதுதான், உள்ளே மாணவி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமார் 14 மணி நேரம் உணவு, தண்ணீர் மற்றும் போதிய காற்றோட்டம் இன்றி இருளில் லிப்டுக்குள் சிக்கித் தவித்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாற்று மின்சார (Generator/Backup) வசதி இல்லாததும், லிப்டுகளைச் சரிபார்க்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.