சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது பெண் குழந்தை நள்ளிரவில் மாயம்!

 
பெண் குழந்தை பெண்குழந்தை மாயம் கடத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் சாலையோரத்தில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நாடோடி தம்பதியினரின் 1 வயது பெண் குழந்தை மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் சாலையோரமாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வழக்கம் போல் குடும்பத்தினர் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

குழந்தை பிரசவம்

பின்னர் நள்ளிரவில் விழித்துப் பார்த்த பெற்றோர், தாங்கள் அருகில் தூங்க வைத்திருந்த 1 வயது பெண் குழந்தை திடீரெனக் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், இது குறித்து உடனடியாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தை மாயமானது குறித்த புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உடனடியாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தையைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்தும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் குறித்தும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை நள்ளிரவில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன், குழந்தையை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.