20 ஆண்டு டாக்டரைப் பணியை கைவிட்டு பன் கடை தொடங்கிய மருத்துவர் - மன அழுத்தத்திலிருந்து விடுபட அதிரடி முடிவு!

 
சீன பன் டாக்டர்

அதிகரித்துவரும் பணிச்சுமை மற்றும் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக, சீனாவைச் சேர்ந்த 48 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது இரண்டு தசாப்த கால மருத்துவத் தொழிலைக் கைவிட்டு, பாரம்பரியப் பன் கடை ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தைச் சேர்ந்த டாங் மின் (48), கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே ஒரு தனியார் மருத்துவமனையையும் நிர்வகித்து வந்த அவருக்கு, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைக் தாண்டிய நிர்வாகப் பணிகள் மற்றும் தணிக்கை சோதனைகள் காரணமாகக் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு டாக்டர் மருத்துவர் எம்பிபிஎஸ்

மன அமைதியை மட்டுமே முதன்மையாகக் கருதிய அவர், கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மருத்துவப் பதவியைத் துறந்துவிட்டு, வூஹான் நகரில் பாரம்பரியமான ஆவியில் வேகவைத்த பன் விற்கும் கடையைத் தொடங்கினார்.

உணவுத் துறையில் நிலவும் கடும் போட்டிகளுக்கு நடுவிலும் இவரது கடைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. வியாபாரம் அமோகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் இவர் தனது இரண்டாவது கிளையையும் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முன்பு மருத்துவராக இருந்தபோது வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தினமும் தோன்றும் என்றும், தற்போது பன் கடை நடத்துவது உடல் ரீதியாகச் சோர்வைத் தந்தாலும் மன ரீதியாக அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிக வருமானத்தை விட மன ஆரோக்கியமே முக்கியம் என்பதை உணர்த்தும் இவரது இந்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.