3 வயது பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி.. கரூரில் பரபரப்பு!

 
பாட்டி கொலை

கரூர் மாவட்டம் குளித்தலையில் 3 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளியை, அச்சிறுமியின் பாட்டி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அவளது பாட்டி வீட்டில் விடுவதாகக் கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

மாணிக்கத்தின் வீட்டின் பிடியிலிருந்து தப்பி வந்த 3 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துத் தனது பாட்டியிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். சிறுமி கூறியதைக் கேட்டு உறைந்துபோன பாட்டி, கடும் ஆத்திரத்தில் வீடிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மாணிக்கத்தைத் தேடிச் சென்றுள்ளார்.

கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த மாணிக்கத்தைப் பார்த்ததும், மூதாட்டி அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியைத் தடுத்து அவரிடமிருந்த அரிவாளைப் பறித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணிக்கம் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.