திருப்பரங்குன்றத்தில் தர்காவைச் சுற்றி 50 மீ இடைவெளி... தீபமேற்ற உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன?!

 
திருப்பரங்குன்றம் தர்கா

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று நவம்பர் 28, சனிக்கிழமை எவ்வாறு தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான விரிவான வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர், கோவில் மரபுகளுக்கு ஏற்பத் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இன்று (நவம்பர் 28) முறைப்படி அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இவர்களுக்குத் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைத்து உதவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கல்தூண்

தீபம் ஏற்றும் நிகழ்வு கோவிலின் பாரம்பரியச் சடங்குகள் மற்றும் ஆகம மரபுகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், அதிலிருந்து தீபம் எடுத்து ஏற்றுவதா அல்லது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்துக் கோவில் அலுவலர்கள் மற்றும் பட்டர்களுடன் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கலந்து ஆலோசித்து உரிய முடிவெடுத்துத் தீபம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை மீது அமைந்துள்ள தர்காவைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் விளக்கேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. தீபத்தூண் மற்றும் மலை மீது விளக்கேற்றும் மற்ற அனைத்து இடங்களுக்கும் இந்த 50 மீட்டர் இடைவெளிக் கட்டுப்பாடு பொருந்தும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு இன்று திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசித்து மாலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.