6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்... 57 வயது குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு சேவியர் என்ற பூம்பூம் சேவியர் என்பவர் இந்த கொடூர குற்றத்தைச் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 11 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. இதில் ஒரு மரண தண்டனையும், 2 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
