தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பு... லாவகமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்!
சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் தண்ணீர் கம்பெனிக்குள் திடீரென 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தலையை உயர்த்திப் படம் எடுத்துக் காட்டிய அந்தப் பாம்பை மிகுந்த லாவகத்துடனும் பாதுகாப்பாகவும் பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
சென்னை மதுரவாயல் வெங்கடேஸ்வரா நகர் பாரதி சாலையில் சசிகுமார் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் விநியோக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், நிறுவன வளாகத்திற்குள் சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று திடீரெனப் புகுந்துள்ளது.
மிகப் பெரிய அளவிலான நல்ல பாம்பைக் கண்ட நிறுவன உரிமையாளர் சசிகுமார் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நச்சுத் தன்மை கொண்ட நல்ல பாம்பு என்பதால், ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாகப் பணிகள் நிறுத்தப்பட்டு அப்பகுதியினர் பாதுகாப்பான இடத்திற்கு விலகி நின்றனர்.

பாம்பு புகுந்தது குறித்து சசிகுமார் உடனடியாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலைப் பெற்றவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பாம்பைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட போது, அந்த 7 அடி நல்ல பாம்பு ஆக்ரோஷமாகத் தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடியது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு நீடித்தாலும், அனுபவம் வாய்ந்த தீயணைப்பு வீரர்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி மிகுந்த கவனத்துடனும் லாவகத்துடனும் செயல்பட்டுப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
பிடிபட்ட நல்ல பாம்பைச் சிறப்புக் கலனில் பாதுகாப்பாக வைத்த தீயணைப்பு வீரர்கள், அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் தென்படும்போது பொதுமக்கள் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்காமல், உடனடியாகத் தீயணைப்புத் துறை அல்லது வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
