"7 மணி நேர விசாரணை.. 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்" - விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!
Mar 15, 2026, 19:28 IST
கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். காலை 10:30 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 5:45 மணி அளவில் நிறைவடைந்தது.
மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய சிபிஐ குழு, விஜய்யிடம் சுமார் 120-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. "கரூர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏன் தொடர்புபடுத்துகிறீர்கள்?" என சிபிஐ அதிகாரிகள் முக்கியமாகக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. பிரச்சாரத்தின் போது முறையான அனுமதி பெறப்பட்டதா மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் ஆஜரானபோது விஜய் அளித்த சில பதில்கள் முரணாக இருந்ததால், இம்முறை ஆதாரங்களுடன் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக நிதி ஆதாரம் மற்றும் மேடை அமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்துக் கேட்கப்பட்டது.
விஜய் விசாரணைக்காக ஆஜரானதை முன்னிட்டு டெல்லி சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 6 மணி அளவில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் அமைதியாகத் தனது வாகனத்தில் ஏறிச் சென்றார். அவர் இன்று இரவு டெல்லியிலேயே தங்கிவிட்டு, நாளை காலை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

