நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

 
கரடி

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டியில் கரடி உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதிகளில் நிலவும் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை, குறைந்த நிலப்பரப்பில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் உலா வரும் கரடிகள், கடைகளை உடைத்துப் உணவுப் பொருட்களைச் சூறையாடிச் சாப்பிடுவது வாடிக்கையாகி வருகிறது.

கரடி

ஊட்டி சர்ச்ஹில் குடியிருப்புப் பகுதியில் மாலை வேளையில் கரடி ஒன்று திடீரென உலா வந்துள்ளது. கரடியைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தச் கரடி மீண்டும் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து கரடிகள் உலா வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.