வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு - இன்று கொடி இறக்கம்!

 
வேளாங்கண்ணி மாதா

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய ஆடம்பரத் தேர் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமரிசையாக நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய ஆடம்பரத் தேர் பவனி நேற்று மாலை கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். இதனால் பேராலய வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

தேர் பவனியை முன்னிட்டு மாலை 5.30 மணியளவில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு மற்றும் நவநாள் ஜெபம் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருப்பலி முடிவடைந்ததும் இரவு 7.30 மணியளவில் பெரிய தேர்பவனி தொடங்கியது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய 6 சிறிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன. இச்சிறிய தேர்களைப் பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து வந்தனர். அவற்றைத் தொடர்ந்து, அன்னை ஆரோக்கிய மாதாவின் சொரூபம் தாங்கிய பிரம்மாண்ட பெரிய ஆடம்பரத் தேர் மின் விளக்கு அலங்காரத்தில் பேரொளியுடன் நகர்ந்து வந்தது. இந்தத் தேரினை ஆண்கள் பக்திப் பெருக்குடன் சுமந்து வந்தனர்.

வேளாங்கண்ணி

பேராலய முகப்பில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, கடற்கரை சாலை மற்றும் திராவிடா ஓட்டல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரின் இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "மரியே வாழ்க... மாதா வாழ்க..." என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பலர் மெழுகுவர்த்தி ஏந்தியும், தேரின் மீது மலர்களைத் தூவியும், முழங்காலிட்டு உருகியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதனால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டு மின்னொளியில் ஜொலித்தது.

பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 525-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடற்கரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகளுடன் வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பேராலய வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அன்னையின் பிறந்தநாளான இன்று அதிகாலை பேராலயத்தில் சிறப்பு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து, இன்று மாலை அன்னை மாதாவின் கொடி இறக்கப்பட்டு, 11 நாட்கள் நடைபெற்ற சிறப்புமிக்க வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா முறைப்படி நிறைவு பெறுகிறது.