ஈரானுக்குப் பெரிய அதிர்ச்சி... உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம்!
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் ரகசிய மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரது மகன் மொஜ்தபா கமேனி, முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பொதுவெளியில் தோன்றாமல் ரகசிய இடத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் ‘சேனல் 14’ தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கக்கூடும் என ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளிடையே தகவல்கள் கசிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், "தற்போதைய சூழலில் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். அதிபரின் இந்த அறிக்கை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
