பெரும் திருப்பம்... ட்ரம்ப் கோரிக்கையை ஏற்றார் புதின் - மே 9ல் உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு?!
கடந்த நான்கு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் முதற்கட்ட வெற்றியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எட்டியுள்ளார்.
நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையே சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஈரான் விவகாரம் மற்றும் உக்ரைன் போர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் உதவுவதை விட, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தமக்கு முக்கியம் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, வரும் மே 9-ஆம் தேதி ரஷ்யா கொண்டாடும் 'வெற்றி தினத்தை' முன்னிட்டு ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்கப் புதின் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 9 அன்று மாஸ்கோவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின் போது, உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போர் நிறுத்தம் ஒரு தற்காலிக இடைவேளையாக இல்லாமல், நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இட்டுச் செல்லும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஒரு தீர்வு மிக அருகில் உள்ளது" என அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இருப்பினும், முந்தைய காலங்களில் ரஷ்யா அறிவித்த ஈஸ்டர் கால போர் நிறுத்தங்களை அதுவே மீறியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, தற்போதைய இந்த அறிவிப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுகி வருகிறார்.
இரண்டாம் உலகப்போர் வெற்றி தினமான மே 9 அன்று, இந்தப் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும், கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
