இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதா - அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு!
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்கக் கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவின் நிதி ஆதாரத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வெளிநாடுகள் வாங்குவதைத் தடுக்கும் வகையிலும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் கண்டித்தும் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா மீதான நடைமுறை வாக்கெடுப்பு செனட் சபையில் ஏற்கனவே நிறைவேறியுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை (செப்டம்பர் 17) இதன் இறுதி ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது.
