"நெல் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சமா?" - கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர்; அதிகாரி சஸ்பெண்ட்!

 
அமைச்சர் வெங்கடரமணன்

 

கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில், தவெக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று  கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளை அமைச்சர் ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட் செய்யப் பரிந்துரைத்த சம்பவம் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூர் அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நெல் விற்க வந்திருந்த விவசாயிகளின் விபரங்களைச் சேகரித்த அமைச்சர், திடீரென ஒரு விவசாயியின் மொபைல் எண்ணிற்குத் தானே நேரடியாகத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அமைச்சரின் இந்தத் திடீர் அழைப்பால் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போனில் பேசிய விவசாயியிடம், "நெல் கொள்முதல் செய்ய உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா?" என்று அமைச்சர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் வெங்கடரமணன்

அமைச்சரின் கேள்விக்குத் பதிலளித்த அந்த விவசாயி, "ஆமாம் ஐயா, இங்கு நெல் விற்றுப் பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்" என்று குமுறலை வெளிப்படுத்தினார். விவசாயி லஞ்சப் புகாரை உறுதி செய்த அடுத்த நிமிடமே ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் வெங்கடரமணன், லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரி உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். அமைச்சரின் பரிந்துரையை ஏற்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட லஞ்ச அதிகாரிகளைச் சஸ்பெண்ட் செய்து உடனடியாக உத்தரவிட்டார்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அமைச்சர் வெங்கடரமணன் காலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அரிசி அரைக்கும் திறன், ஆலையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்படும் அரிசியின் தரக் கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கடரமணன் அறிவுறுத்தினார்.