காரில் லிப்ட் கொடுத்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - தவெக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

 
தவெக பாலியல் கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியான அரசியல் கட்சிப் பெண் நிர்வாகியுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, காரில் அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி, தனது தோழியான தவெக பெண் நிர்வாகியுடன் கல்லூரி முடிந்து ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையைச் சேர்ந்த தவெக பிரமுகரான கிறிஸ்டோபர் (50) தனது காரில் வந்து அவர்களுக்கு 'லிப்ட்' கொடுத்துள்ளார். காரில் இருவரும் ஏறிப் பயணம் செய்த நிலையில், மூலச்சல் பகுதியில் தவெக பெண் நிர்வாகி இறங்கிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவியை மட்டும் காரில் தனியாக வைத்துக்கொண்டு கிறிஸ்டோபர் பயணம் செய்துள்ளார்.

வழியில் திடீரென மழை பெய்துள்ளதால், கார் கண்ணாடியைத் துடைப்பதாக நாடகமாடிய கிறிஸ்டோபர், மாணவிக்கு திடீரெனப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த மாணவி, இந்த விவகாரத்தை உடனடியாக தனது தோழியிடம் கூறிவிடுவதாகக் கூறி அவரை எச்சரித்துள்ளார். இதனால் பதறிப்போன கிறிஸ்டோபர் மாணவியிடம் மன்னிப்புக்கோரி மன்றாடியுள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

வீட்டுக்குச் சென்றதும் மாணவி நடந்த விவரங்களை அனைத்தையும் தனது தோழியிடம் அழுதுபுரண்டு கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தோழியும் இணைந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், தவெக பிரமுகர் கிறிஸ்டோபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.