“திமுக தீயசக்தி..” சிறுவர்களை வைத்து கோஷமிட்டு பிரச்சாரம் செய்த தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
தேர்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், சிறுவர்களை வைத்து கோஷமிட வைத்து பிரச்சாரம் செய்த தவெக மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் த.வெ.க கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பிரசாரத்தின்போது அங்கிருந்த சிறுவர்களை ஒன்றிணைத்து, "ஓம் சக்தி பராசக்தி, தி.மு.க ஒரு தீய சக்தி" எனத் தொடர்ந்து கோஷமிட வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், த.வெ.க தலைவர் விஜய் படம் மற்றும் கட்சிச் சின்னம் பொறித்த ஸ்டிக்கர்களை அங்கிருந்த வீடுகளில் அவர்கள் ஒட்டியுள்ளனர்.

சிறுவர்களை அரசியலுக்குப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், திருஉத்தரகோசமங்கை சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act), தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் (இந்தியத் தேர்தல் ஆணைய விதிமுறை மீறல்) ஆகிய சட்டங்களின் கீழ் 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் மலர்விழி ஜெயபாலா மற்றும் த.வெ.க நிர்வாகிகள் மீது போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2026 தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் த.வெ.க-விற்கு ஆரம்பத்திலேயே இத்தகைய சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
