செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தவெக செயலாளர் மீது வழக்குப்பதிவு!

 
நாகை தவெக செயலாளர்

நாகையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்துச் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களைத் தொலைபேசி வாயிலாக மிரட்டிய தவெக நகரச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தவெக நிர்வாகி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிப் பரவிய நிலையில், தவெக நாகை நகரச் செயலாளரான பாலு என்பவர் சம்பந்தப்பட்ட செய்தியாளர்களை வாட்ஸ்அப் குரலழைப்பு (WhatsApp Call) மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், "இதுதான் உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை; இனிமேல் இதுகுறித்துச் செய்தி வெளியிட்டால் உங்களைக் காலி செய்துவிடுவேன்" என்று கடுமையான வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களைப் பணியை மேற்கொள்ள விடாமல் அச்சுறுத்தும் வகையில் விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் குறித்து நாகை மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.