திருமாவளவன் மீது வழக்குப்பதிவு... பண்ருட்டி வேட்பாளரும் சிக்கினார்!

 
திருமாவளவன் திருமாவளவன்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிப் பிரசாரம் செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 11, சனிக்கிழமை) விசிக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி தொகுதி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமானை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.

திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்திப் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமாவளவன் இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினரின் புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்ததற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவன், பண்ருட்டி தொகுதி வேட்பாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமா திருமாவளவன் விசிக

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரப் பயணத்தில் இருப்பதால், நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பெரும் சவால்கள் நிலவி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கட்சித் தலைவர்கள் மீதும் இத்தகைய விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில், தற்போது திருமாவளவன் மீதான இந்த நடவடிக்கை விசிக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.