"Party fund தொடர்பாக கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும்" - அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், எதிர்க்கட்சியான திமுகவின் கடந்தகால நிதி முறைகேடுகள் மற்றும் 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரங்கள் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பழைய ஆடியோ விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து, திமுகவிற்கு அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "திமுக ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்து, அதை எங்கு கொண்டு சேர்ப்பது என்று தெரியாமல் தவித்ததாக அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அந்த 30 ஆயிரம் கோடி மக்கள் பணம் தற்போது எங்கே இருக்கிறது? இதற்கு திமுக தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கட்சி நிதி என்ற பெயரிலும், திரட்டப்பட்ட பல்வேறு முறைகேடான நிதிகள் குறித்தும் தற்போதைய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் சட்டப்பூர்வமாக வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் இன்று காலை சட்டமன்றத்தில் பேசும்போது, "கடந்த காலங்களில் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதை வழிமொழியும் விதமாக மின்சாரத்துறை அமைச்சரின் இந்தச் செய்தியாளர் சந்திப்பு அமைந்துள்ளது.
"மக்கள் பணத்தைச் சுருட்டி வைத்துள்ளவர்கள் மீது நாங்கள் முறைப்படி வழக்கு தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தத் தயாராகி வருகிறோம். இந்த வழக்குகளையும், விசாரணைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள திமுக தலைமை தயாராக இருக்கிறதா?" என்று அமைச்சர் நிர்மல்குமார் சவால் விடுத்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, சட்டப்பேரவைக்கு வெளியேயும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.
