ரூ.46 கோடி காசோலை புகார்... “ராதாதான் காசோலை கொடுத்தார்!” நடிகை அம்பிகா பரபரப்பு விளக்கம்!
நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக, நடிகை அம்பிகா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அம்பிகா, காசோலைகள் தொடர்பான விவகாரத்தில் ராதா கூறிய தகவல்கள் தவறானவை என தெரிவித்தார்.
ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்து தொடர்பாக நீண்ட காலமாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக அம்பிகா கூறினார். ஏ.ஆர்.எஸ். கார்டனை முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வழங்கியதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும், அந்த சொத்து தங்களது உழைப்பில் வாங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சொத்து தகராறை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ராதாதான் தங்களுக்கு காசோலைகளை வழங்கியதாக அம்பிகா கூறினார். அந்த காசோலைகள் முறைகேடாக எடுக்கப்பட்டவை அல்லது மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டவை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
காசோலை தொடர்பான பணப் பரிமாற்றத்தை பின்னர் நிறுத்தியதும் ராதாதான் என்றும் அம்பிகா தெரிவித்தார். இதனால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ரூ.46 கோடி காசோலை மோசடி குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், ராதா அளித்த புகாரில், தன்னிடம் இருந்த கையெழுத்திட்ட பழைய காசோலைகள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் ஐந்து காசோலைகள் மூலம் சுமார் ரூ.46 கோடி பெற முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை அம்பிகா மறுத்துள்ளார்.சொத்து மற்றும் காசோலை தொடர்பான இரு தரப்பு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
