‘மகள் பிறந்திருக்கிறாள்...’ - நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது மனைவி நர்மதா தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2022ல் நர்மதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஹரிஷ் கல்யாண், நேற்று தங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தானும் தனது மனைவி நர்மதாவும் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது தாயும் சேயும் மிகவும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாகவும், இந்த ஒரு புதிய அழகான பயணத்தைத் தொடங்கும் வேளையில், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைக் கூறியுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்குத் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் தற்போது 'லப்பர் பந்து' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
