குடிபோதையில் ரகளை செய்த நபர்.. ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற சக கட்டிட தொழிலாளர்கள்!

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் முத்து. இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கடந்த ஒரு மாதமாக காமராஜ் நகர் 3வது குறுக்குத் தெரு பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் வேலைக்கு வந்துள்ளனர்.
முத்துவுடன் கோவையைச் சேர்ந்த சந்துரு, திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா ஆகியோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அப்போது சக தொழிலாளிகளான சந்துரு, ராஜா ஆகிய இருவரையும் முத்து மிரட்டியுள்ளார். “நான் பெரிய ரவுடி, எனக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது” என்று கத்தியைக் காட்டி மிரட்டி அடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி முத்துவும், சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் சந்துரு முத்துவிடம் இருந்து கத்தியை எடுத்து முத்துவின் முகத்தில் பலமாக குத்தியுள்ளார். அப்போது, ராஜாவும் சேர்ந்து முத்துவை வெட்டிக் கொன்றார்.
இதையடுத்து இருவரும் இறந்த முத்துவின் உடலை குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து கட்டிட பொறியாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவின் செல்போன் சிக்னலை கண்காணித்து கோவைக்கு சென்று சந்துரு, ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில் முத்துவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழியிலிருந்து மீட்கப்பட்டபோது முத்துவின் உடல் தலைகீழாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!