10வது படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர்!

 
போலி டாக்டர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டுப் சட்டவிரோதமாகப் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரைச் சுகாதாரத் துறையினர் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

நத்தம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் போலி மருத்துவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர் புகார்கள் வந்தன. புகார்களின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பாரதி தலைமையில், நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் அஜாம் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நத்தம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, செந்துறை பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த கிளினிக் ஒன்றில் பெண் ஒருவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.

மருந்து

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், மருத்துவம் பார்த்த பெண் செந்துறையைச் சேர்ந்த பாப்பாத்தி (55) என்பதும், அவர் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டுப் பல காலமாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து, அவரைப் பிடித்த அதிகாரிகள் உடனடியாக நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்று மேலும் பல போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அனைத்து கிளினிக்குகளிலும் தீவிர சோதனை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.