9-ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு ரூ.1.62 கோடி மதிப்புள்ள BMW காரைப் பரிசளித்த தந்தை.. கொல்கத்தாவில் ருசிகரம்!
மேற்கு வங்க மாநிலத்தில், 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற தனது 15 வயது மகனுக்குத் தொழிலதிபர் ஒருவர் சுமார் ரூ.1.62 கோடி மதிப்பிலான ஆடம்பர பி.எம்.டபிள்யூ காரைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா. இவரது 15 வயது மகன் முகமது தல்ஹா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முன்னதாக, அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஆடம்பரக் கார் வாங்கித் தருவதாகத் தனது மகனிடம் ஷம்சுதீன் மித்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்வில் மகன் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்ததைத் தொடர்ந்து, தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தந்தை முடிவு செய்தார். அதன்படி, மும்பை அந்தேரியில் உள்ள பி.எம்.டபிள்யூ ஷோரூமில் இருந்து சுமார் ரூ.1.62 கோடி மதிப்பிலான 'பி.எம்.டபிள்யூ எம்4 காம்பெடிஷன்' ரக சொகுசு காரை அவர் வாங்கினார்.
சிறப்பு கண்டெய்னர் வாகனம் மூலம் மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்தப் புதிய கார், கடந்த நவம்பர் 6-ஆம் தேதி பராஜ் கிராமத்தை வந்தடைந்தது. கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அந்த ஆடம்பரக் காரின் சாவி மாணவர் முகமது தல்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகனின் படிப்பை ஊக்குவிப்பதற்காகத் தந்தை வழங்கிய இந்த விலையுயர்ந்த பரிசு குறித்துச் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. மகனுக்குக் கொடுத்த வாக்கைத் தவறாமல் காப்பாற்றியதுடன், கல்வி ஆர்வத்தைத் தூண்டிய தந்தையின் செயலை ஒரு தரப்பினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
அதேசமயம், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குக் கூட வயது வராத 15 வயதுச் சிறுவனுக்கு, அதிவேகமாகச் செல்லக்கூடிய சொகுசு காரைப் பரிசளித்திருப்பது குறித்துப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். சிறுவன் சாலைகளில் காரை இயக்கினால் அது விபத்துகளுக்கு வழிவகுக்கக் கூடும் என நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
