சாலையைக் கடந்த ராட்சத மலைப்பாம்பு... 10 அடி நீளப் பாம்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
மலைப்பாம்பு மலைப்பாம்பு

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பரபரப்பான சாலையின் நடுவே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரிதாபாத் 81-வது செக்டார் பகுதியில் உள்ள பிபிடிபி (BPTP) சௌக் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 10 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பு, வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையை மிக நிதானமாகக் கடந்து சென்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கினர்.

மலைப்பாம்பு

தகவல் அறிந்தவுடன் வனத்துறையினர் விரைந்து வந்து, லாவகமாகச் செயல்பட்டு அந்த ராட்சத மலைப்பாம்பைப் பிடித்து, அருகில் உள்ள பாதுகாப்பான காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால், வெப்பத்தைத் தாள முடியாமல் குளிர்ச்சியான இடங்களைத் தேடிப் பாம்புகள் காடுகளை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. காடுகளில் நிலவும் வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவும் நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை நோக்கிப் பாம்புகள் நகர்கின்றன.

சாலையில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளைக் கண்டால், பொதுமக்கள் அதனைச் சீண்டவோ அல்லது அடிக்கவோ வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. உடனடியாகத் தீயணைப்புத் துறை அல்லது வனத்துறைக்குத் தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பானது.