நடுரோட்டில் அரசுப் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு... அலறியடித்து ஓடிய பயணிகள் - நூலிழையில் உயிர் தப்பினர்!

 
அரசுப் பேருந்தில் தீ தீப்பிடித்த அரசுப் பேருந்தில் தீ தீப்பிடித்த

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாகப் பயணிகள் அனைவரும் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இசையனூரிலிருந்து ஆற்காடு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. சக்கரமல்லூர் என்ற பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது, என்ஜின் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தனர்.

புகை வந்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தினார். பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஜன்னல் மற்றும் வாசல் வழியாகக் கீழே இறங்கி ஓடினர். இதனால் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ஆற்காடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகிச் சேதமடைந்தன.

பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைமையிலான புதிய அரசு, போக்குவரத்துத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பழைய பேருந்துகளின் பராமரிப்பு குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்காடு - செய்யாறு சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.