அதிகாலையில் கோர விபத்து... லாரி மீது கார் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த கார், அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டா அருகே உள்ள கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அதிகாலை சுமார் 2 மணியளவில், முன்னால் சென்ற லாரி ஒன்று வேகத்தடையில் மெதுவாகச் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பயங்கர வேகத்தில் பலமாக மோதியது.

இதில் கார் முற்றிலுமாக சிதைந்தது. காரில் இருந்த மனோஜ் மிட்டல் (35), முகமது ஆலம் (30) மற்றும் இரண்டு பெண்கள் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
