குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்தி கோஷங்களுடன் விமரிசையாக நடைபெற்றது.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், குணசீல மஹரிஷியின் வேண்டுதலின்படி பெருமாள் எழுந்தருளிய தலமாகும். திருப்பதிக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்த முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால், இத்தலம் 'தென் திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நாட்களின்படி, சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியும், கடந்த 20-ஆம் தேதி திருக்கல்யாணமும், 21-ஆம் தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5.30 மணிக்கு உபயநாச்சியார்களுடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் காவிரியில் புனித நீராடிவிட்டு, தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் காலை 9.10 மணிக்கு நிலையை அடைந்தது. வாத்தலை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
