இளம்பெண் என்று நம்பி AI - யைக் காதலித்து சொத்துக்களை விற்று ஏமாந்த நபர்!
பிரேசில் நாட்டில் சமூக வலைதளத்தின் மூலம் பழகிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு நீண்ட தூரம் பயணம் செய்த நபர் ஏமாற்றமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்டின் (49) என்பவரது தாயார் காலமானதை அடுத்து, அவர் கடுமையான தனிமையில் வாடி வந்துள்ளார். தனது தனிமையைப் போக்குவதற்காகவும் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகவும் அவர் சமூக வலைதளங்களை நாடியுள்ளார். அப்போது அங்கு அறிமுகமான ஒரு பெண்ணுடன் அவருக்கு இணையம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்தப் பெண்ணின் மீது தீவிரக் காதல் கொண்டுள்ளார் மார்டின்.

அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நிஜ வாழ்க்கையில் இணைய ஆசைப்பட்ட அவர், தனது சொந்தச் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டுப் பணத்துடன் அப்பெண்ணைத் தேடி சுமார் 1,200 மைல்கள் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார்.
குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அவர் விசாரித்தபோதுதான், தான் சமூக வலைதளத்தில் பழகியது எந்தவொரு நிஜப் பெண்ணும் கிடையாது என்பதும், அது ஒரு போலி கணக்கு என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தான் தீவிரமாகக் காதலித்ததும் நம்பியதும் வெறும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தோற்றத்தை மட்டுமே என்பதை அறிந்து மார்டின் கடும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ளார்.
