தாய், மகள் மீது வளர்ப்பு நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த விபரீதம்... பக்கத்து வீட்டுக்காரர் கொடூரம்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில், பெண் ஒருவரையும் அவரது தாயாரையும், பக்கத்து வீட்டில் வசிப்பவர் தனது வீட்டு வளர்ப்பு நாயைக் கடிக்க விட்டு வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 13-ம் தேதி, பபிதா தனது பெற்றோரைப் பார்த்துவிட்டுத் தனது கணவர் வீட்டிற்குத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார் ராமலிங்கம் என்பவரது மகள் பபிதா. அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனி என்பவர் வளர்த்து வரும் நாய், திடீரென வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து பபிதாவைக் கடித்துள்ளது. மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் மல்லிகா, நாயிடமிருந்து தனது மகளைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அந்த நாய் மல்லிகாவையும் சரமாரியாகக் கடித்துக் குதறியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை விட்டு தாய், மகளைக் கடிக்க வைத்ததாக காவல் துறையில் புகார்#Nagapattinam | #Dog | #Attack | #CCTV | #Police pic.twitter.com/EeTYAkQJkv
— PttvOnlinenews (@PttvNewsX) March 22, 2026
இந்தச் சம்பவம் நடக்கும்போது, நாயின் உரிமையாளரான பழனியின் குடும்பத்தினர் அங்கேயே இருந்துள்ளனர். ஆனால், நாயைக் கட்டுப்படுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முன்வராமல், அவர்கள் மௌனமாக, தங்களது வீட்டிற்குள் நாய் நுழைந்து விடாதபடி, கேட்டை சாற்றிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த தாய் மல்லிகா மற்றும் மகள் பபிதா இருவரும் தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
