“இறந்த பிறகும் மகள்களைத் தேடும் அம்மா”... இணையத்தை கலங்க வைத்த போஸ்ட்!
கணவரின் மறைவுக்குப் பிறகு இரண்டு மகள்களும் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதால், மும்பையில் தனிமையில் வாடி வந்த சென்னை மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அக்கம்பக்கத்தினரே ஒன்றிணைந்து அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர். மேலும், அவரது மகள்கள் மற்றும் உறவினர்களைத் தேடி அக்கம்பக்கத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிவிப்பு இணையத்தில் பலரையும் கலங்கடித்துள்ளது.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வந்துள்ளார். கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவரது குடும்பத்தில், கணவரின் மறைவுக்குப் பிறகு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கணவர் உயிரிழந்த பிறகு, லலிதா கிருஷ்ணமூர்த்தியின் இரண்டு மகள்களும் தாயுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முதுமைக் காலத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவின்றி அவர் கடும் தனிமையில் வாடி வந்துள்ளார்.
வயது மூப்பு மற்றும் தனிமையின் வேதனையில் வாழ்ந்து வந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியைத் தெரிவிக்க அவரது மகள்கள் அல்லது உறவினர்களின் தொடர்பு எண்களோ, முகவரிகளோ கிடைக்கவில்லை.
குடும்பத்தினர் யாரும் வராத சூழலில், லலிதா கிருஷ்ணமூர்த்தி வசித்து வந்த பகுதியைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினரே தங்களது சொந்தக் குடும்ப உறுப்பினரைப் போல முன்னின்று அனைத்து இறுதிச் சடங்குகளையும் மரியாதையுடன் செய்து முடித்துள்ளனர்.
இறுதிச் சடங்குகளை முடித்த அக்கம்பக்கத்தினர், லலிதா கிருஷ்ணமூர்த்தியின் மறைவுச் செய்தியாவது அவரது மகள்கள் மற்றும் சென்னையில் உள்ள உறவினர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், அவரது புகைப்படம் மற்றும் விவரங்களுடன் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“இறந்த பிறகும் மகள்களைத் தேடும் அம்மா” என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் இந்தச் செய்தியும் அறிவிப்பும் இணையத்தில் வேகமாகப் பரவிப் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. முதுமைக் காலத்தில் பெற்றோரைத் தனிமையில் தவிக்க விடும் போக்கு குறித்துப் பலரும் தங்களது ஆழ்ந்த வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
