FIFA WC உலகக்கோப்பையில் புதிய வரலாறு.. அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ எவராலும் முறியடிக்க முடியாத ஒரு புதிய உலக சாதனையைப் படைத்து கால்பந்து உலகின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில்தான் ரொனால்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சாதனை அரங்கேறியது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி ஆட்டத்தைத் தனது முழு முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ஜோவோ கேன்செலோ பந்தை மிகத் துல்லியமாகக் கடத்திக் கொடுக்க, அதை மின்னல் வேகத்தில் வாங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, உஸ்பெகிஸ்தான் அணியின் தற்காப்பு அரணைத் தகர்த்து அபாரமாக ஒரு கோல் அடித்தார்.
மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பலத்த முழக்கத்திற்கு மத்தியில் இந்த கோல் அடிக்கப்பட்டது. இதன் மூலம் போர்ச்சுகல் அணி ஆரம்பத்திலேயே 1-0 என முன்னிலை பெற்றதுடன், ஆட்டத்தின் இறுதியில் 5-0 எனப் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஒரு கோலின் மூலம் சர்வதேச கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத மாபெரும் சாதனையை ரொனால்டோ தனது வசமாக்கியுள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 6 வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே கால்பந்து வீரர் என்ற உலக சாதனையை ரொனால்டோ அதிகாரப்பூர்வமாகப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 5 வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த சாதனையும் அவரிடமே இருந்த நிலையில், தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து 41 வயதிலும் "வயது என்பது வெறும் எண்தான்" என்பதை நிரூபித்து உலக கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!
